காட்பாடி அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
காட்பாடி அருகேயுள்ள லாலாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தர் ரிஷிகேஷ் (25). அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த கார்ணாம்பட்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் (53), ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளார். பேரத்தின் முடிவில், ரூ.7,000 பணத்தைப் பெற்றுக்கொள்ள கார்த்திகேயன் சம்மதித்தார்.
ஆனால், பணத்தைக் கொடுக்க விரும்பாத ரிஷிகேஷ், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் காவல் துறையினர் கொடுத்தனுப்பினர்.
கார்ணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் 7,000 ரூபாயைக் கார்த்திகேயன் இன்று (அக். 20) பெற்றுக்கொண்டார். அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய குழுவினர் கார்த்திகேயனைக் கைது செய்தனர்.