மதுரை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காக நிறைவேற்றப்படும் பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பேக்கேஜ்-4 திட்டத்தில் 28 வார்டுகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள் போடுவதற்கு ரூ.270 நிதி வழங்குவதற்கு ஏசியன் டெவெலப்மெண்ட் வங்கியும், தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆகையால், விரைவில் இந்த பேக்கேஜ்-4 டெண்டர் விடப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு தற்போது 130 எம்எல்டி (மில்லியன் லிட்டர்) குடிநீர் தேவைப்படுகிறது. ஒரு தனிநபருக்கு 135 லிட்டர் வழங்க வேண்டும்.
ஆனால், குடிநீர் பற்றாக்குறையால் மாநகராட்சியால் 100 லிட்டர் கூட கொடுக்க முடியில்லை. தற்போதைய நிலவரப்படி மாநகராட்சிக்கு வைகை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 150 எம்எல்டி குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.
அதனால், மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1,295 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் மூலம், 125 எம்எல்டி குடிநீர் கூடுதலாகக் கிடைக்க உள்ளது. இந்தத் திட்டம் பேக்கேஜ்-1, பேக்கேஜ்-2, பேக்கேஜ்-3, பேக்கேஜ்-4, பேக்கேஜ்-5 ஆகிய 5 நிலைகளில் நடக்கிறது.
இந்தத் திட்டத்திற்கு ஏசியன் டெவலெப்மெண்ட் வங்கி நிதி வழங்குகிறது. தற்போது வரை பேக்கேஜ்-1, 2, 3 போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடக்கிறது.
இந்நிலையில் பேக்கேஜ்-4-க்கு தற்போது ஏசியன் டெவலெப்மெண்ட் வங்கியும், தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேக்கேஜ்-4க்கு தமிழக அரசு தொழில்நுட்ப அனுமதியும், ஏசியன் டெவெலப்மெண்ட் வங்கி நிதி வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பேக்கேஜ்-1 ரூ.318 கோடியிலும், பேக்கேஜ்-2 ரூ.123 கோடியிலும், பேக்கேஜ் -3 ரூ. 476 கோடியிலும், பேக்கேஜ்-4 ரூ.270 கோடியிலும், பேக்கேஜ் -310 கோடியிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இதில், பேக்கேஜ் 1,2,3,4 ஆகியவை மட்டுமே பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நடக்கிறது. பேக்கேஜ்-5 மட்டும் அம்ரூத் திட்டத்தில் நடக்கிறது. விரைவில், பேக்கேஜ்-4 டெண்டர் விட்டும் பணிகள் தொடங்கிவிடும். இன்னும் பேக்கேஜ்-5 மட்டுமே ஒப்புதல் பெற வேண்டிய உள்ளது, ’’ என்றனர்.