பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (அக். 20) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

"மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்திற்கு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சேலத்தில் 9 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 7 செ.மீ., ராஜபாளையத்தில் 6 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம் மற்றும் தருமபுரி மாவட்டம் அரூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT