ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் செப்.5-ம் தேதி வந்த இளைஞர் ஒருவரை மண்டபம் மெரைன் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், சிங்களவரான அவர் கொழும்பு துறைமுகத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா(30) என்பதும், இவர் போதைப் பொருட்களை கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்ததால் இலங்கையில் காவல் துறையினால் தேடப்பட்டு வரும் நபர் என்பதும் தெரிய வந்தது. பிரதீப்குமார் பண்டாராவுக்கும், கோவையில் மர்மமான முறையில் இறந்த இலங்கை போதைப் பொருள் கடத்தல்காரர் அங்கட லக்காவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி மாற்றினார்.
மேலும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை தாதாக்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காவல் துறையினர் பறிமுதல் செய்த போதைப்பொருளை கடத்தல்காரர்களிடம் விற்பனை செய்ததாக பிரதீப்குமார் பண்டாரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதீப்குமார் பண்டாராவை இலங்கை காவல்துறை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்ல இன்டர்போல் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.