தமிழகம்

கம்யூனிஸ்ட்டுகளை யாரும் தனிமைப்படுத்த முடியாது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

கம்யூனிஸ்ட்டுகளை யாரும் தனிமைப்படுத்த முடியாது என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி அறிமுகக் கூட்டம் பழனியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க அதிமுக தயாரில்லை.

அதனால், மகிழ்ச்சியாக சேர்ந்தோம், மகிழ்ச்சியாகப் பிரிவோம் என அக்கட்சியினர் கூறினர். கடந்த 60 ஆண்டுகளாக, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு சவால்கள், நெருக்கடிகள், சோதனைகளைச் சந்தித்துள்ளன.

தற்போது தனித்துப் போட்டியிடும் சவாலைச் சந்திக்கும் வலிமையை கம்யூ னிஸ்ட்டுகள் பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. புறக்கணிக்கவும் முடியாது.

அதிமுக, திமுக நாடகம்

தமிழகத்தில் அதிமுக, திமுக.வினர் இதுவரை தங்களின் நிலையை தெளிவுபடுத்தவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பாஜக பக்கம் சாய்வதே அவர்களுடைய நோக்கமாக உள்ளது.

சிறு வணிகத்தில் அந்நிய நிறு வனங்கள் முதலீட்டை 2002ம் ஆண்டு பாஜக அரசுதான் முன் மொழிந்தது. அதை காங்கிரஸ் அரசு தற்போது அமல்படுத்தியது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எரிவாயு விலையை உயர்த்தியதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. இதற்கு பாஜக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முன்மொழிந்துள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது முக்கியமில்லை, இந்துத்துவா நாட்டை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்கிறார் அத் வானி. இதை திமுக, அதிமுக கட்சிகள் கண்டிக்கவில்லை. குற்றம் செய்கிறவர்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை.

குற்றம் நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் குற்றவாளிகள் தான். அதனால், உண்மையான மாற்று ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கிய மதசார்பற்ற அணியால் மட்டுமே ஏற்படுத்த முடியும். இதை மக்கள் மத்தியில் கட்சியினர் எடுத்துச் சென்றாலே எளிதில் வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகத்தான் போட்டியிடுகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT