தமிழகம்

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு உட்பட 5 அம்சத்துக்கு முக்கியத்துவம்: தயாரிப்பு குழுவுக்கு கமல் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட 5 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் அறிக்கையை தயாரிக்குமாறு இக்குழுவினருக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலுக்காக தயாரிக்கப்பட உள்ள தேர்தல் அறிக்கையில் திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகிய 5 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரை கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தேவையை அறிவதற்காக, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு கேள்விகள் தயாரித்துமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசனும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இதனால், பொதுமக்களின் தேவைகளை பிரதிபலிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT