தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் மத்திய சென்னை அதிமுக வேட்பாளர்.
இந்த மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி பெற்றுள்ளார். அவர், வதோதரா தொகுதியில் 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை புரிந்திருக்கிறார். அதேபோல குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் பாஜக வேட்பாளர்தான். காஷ்மீர் மாநிலம் லடாக் தொகுதியில் வெறும் 36 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் துப்ஸ்டான் சுவாங் வெற்றி பெற்றுள்ளார். குலாம்ராசா என்ற சுயேச்சை வேட்பாளர் இவரிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேணுகோபால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,23,430 வாக்குகள் வித்தியாசத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிகுமாரை தோற்கடித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தலித் மக்களிடையே செல்வாக்கு அதிகம். அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததும் இந்தளவு வாக்கு வித்தியாசத்துக்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.
அதேநேரத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய திமுக வேட்பாளர்களில் ஒருவர் என கருதப்பட்டவர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.