தமிழகம்

உள்ளாட்சி நிதியை உடனே வழங்குக: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்திய ஊராட்சி மன்றத் தலைவர்கள் 

கரு.முத்து

சீர்காழி அருகே ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிலர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண்சட்டி ஏந்தி இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார்.

கைகளில் மண்சட்டி ஏந்தியபடி கலந்துகொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், "கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியினை அரசு உடனடியாக வழங்க வேண்டும். 7 மாதங்களாக நிலுவையில் உள்ள மானிய நிதிக்குழு மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களுக்குக் கூடுதல் நிதி வழங்க வேண்டும், வளர்ச்சி நிதிகளில் மாநில அரசு கட்சிப் பாகுபாடு காட்டக் கூடாது.

குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாதமாதம் நிதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்றத்திற்கு வரக்கூடிய வளர்ச்சி நிதியை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது, ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெரியசாமி, முல்லைவேந்தன், சுப்பரவேல், லட்சுமிமுத்துக்குமார் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT