சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேங்காய் நார் மில்லில் வேலை செய்துகொண்டே நீட் தேர்வில் 635 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வசதி இல்லாததால் தவித்து வருகிறார். அவரது குடும்பமே வேதனையில் உள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமம் மரத்துகுட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சேட்டு- லலிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள தேங்காய் நார் மில்லிலும், செங்கல் சூளைகளிலும் வேலை செய்து ஜீவனம் செய்து வருகின்றனர். அன்றாடக் கூலியைக் கொண்டே, தினமும் மூன்று வேளை சாப்பிட முடிகிற நிலையில் சேட்டு குடும்பத்தினர் உள்ளனர்.
இவர்களின் மகன் சுஜித்குமார் பாலகுட்டப் பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அங்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 வரை படித்தார். சுஜித்குமாருக்கு சிறு வயது முதலே மருத்துவப் படிப்பில் ஆர்வம் இருந்ததை அறிந்து, பாலகுட்டப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் வரதராஜன் பெரும் உதவியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் 556 மதிப்பெண்கள் பெற்றார். அப்போது நீட் தேர்வில் 327 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து மாணவர் சுஜித்குமார் குடும்ப வறுமையை மனதில் வைத்துக்கொண்டு பெற்றோருடன் நார் மில் மற்றும் செங்கல் சூளைகளுக்கு வேலைக்குச் சென்றார். மகன் கஷ்டப்படுவதை அறிந்த சேட்டு, மாணவர் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு நீட் தேர்வுக்காகப் படிக்குமாறு கூறினார். இதையடுத்து மாணவர் சுஜித்குமார் வீட்டின் அருகில் உள்ள நார் மில்லில் வேலை செய்துகொண்டே நீட் தேர்வுக்கும் படித்து வந்தார்.
படிப்பு நேரம் போக வேலை, வேலை நேரம் போக படிப்பு என மாணவர் சுஜித்குமார் தினமும் அதிக மணிநேரம் கண்விழித்துக் கஷ்டப்பட்டுள்ளார். இந்த நிலையில், தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர் சுஜித்குமார், தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில் 635 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில், அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலேயே படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குடும்ப வறுமை காரணமாக கட்டணத்துக்குரிய பணத்தைப் புரட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவன் சுஜித்குமார் கூறும் போது, ''ஏற்கெனவே குடும்ப வறுமை காரணமாக ரூ.4 லட்சம் வரை கடன் உள்ளது. மருத்துவப் படிப்பில் சேர வேண்டி நார் மில்லில் வேலை செய்து கொண்டே, தனியார் பயிற்சிப் பள்ளியில் படித்தேன். எனது படிப்பாற்றலைக் கண்டு அப்பயிற்சி மையத்தில் கட்டணத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டனர். தற்போது நீட் தேர்வில் வெற்றி அடைந்து இருந்தாலும், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான வசதியில்லாத நிலை உள்ளதால், வேதனையாக உள்ளது.
பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் நன்றாகப் படித்ததால், பிளஸ் 2 வகுப்பைத் தனியார் பள்ளியில் பயில நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவினர். குடும்ப வறுமையைத் தாண்டி உழைப்பை மூலதனமாகக் கொண்டு படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியும்'' என்றார்.