தமிழகம்

கடலாடி அருகே ஆறு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகப் புகார் 

கி.தனபாலன்

கடலாடி அருகே 6 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மறவாய்க்குடி கிராமத்தில் சப்தகன்னி மாரியம்மன், மந்தைபிடாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது.

இந்தக் கோயில்களின் முளைப்பாரி விழா கடந்த வாரம் துவங்கியது.

இதில் சங்கரலிங்கம் என்பவரது குடும்பத்திற்கு உள்ள மரியாதையை கிராமத்தைச் சேர்ந்த சிலர் தடுத்துவிட்டதாகவும், அதை தட்டிக்கேட்டதால் சங்கரலிங்கம், அவரது உறவினர்கள் பூமிநாதன், கருப்பையா, முருகானந்தம், குப்புசாமி, பரமானந்தம் ஆகிய ஆறு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவிட்டதாக இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு பேரும் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கரலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. முளைப்பாரி கும்ப மரியாதையை கேட்டதால் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே எங்கள் 6 குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

நான் மளிகைக் கடை வைத்துள்ளேன். எனது கடைக்கு யாரும் பொருட்கள வாங்க வருவதில்லை. முளைப்பாரி திருவிழாவிற்கு எங்களிடம் வரி வாங்கவில்லை. எங்களை சுவாமி தரிசனம் செய்யாவிடாமால் தடுக்கின்றனர்.

நூறு நாள் வேலைக்கு சென்றால் அங்கு எங்களை ஒதுக்குகின்றனர். எங்களை சங்க கட்டிடத்திற்குள்ளும் அனுமதிப்பதில்லை.

குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்றால் எங்கள் குடும்பங்களை விரட்டுகின்றனர். இதுபோன்றவற்றால் 6 குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் வாழ்ந்து வருகிறோம்.

எனவே எங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம நிர்வாகிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT