மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவது தவறு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனியில் இன்று (திங்கள்கிழமை) உழவன் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போடிவிலக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தி டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் போலீஸார் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. டிராக்டர்கள் இதில் கலந்து கொண்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.
இதனால் போராட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே காங்கிரஸா்ர பழனிசெட்டிபட்டியில் இருந்து பேரணியாக தேனி சென்று அங்குள்ள நேருசிலைக்கு மாலை அணிவிக்க முடிவு செய்தனர். ஆனால் போலீஸார் இதற்கும் தடை விதித்தனர்.
பேரணியாகக் கிளம்ப முயன்றவர்களை தடுத்துநிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரி, இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜேஎம் ஹசன்மவுலானா, செயல்தலைவர் மயூராஜெயக்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜெபிமெத்தர், மாவட்டத் தலைவர் முருகேசன், பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநாட்டிற்கோ, தேர்தல் பிரசாரத்திற்கோ டிராக்டர்களை பயன்படுத்தவில்லை. ஆனால் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மிரட்டி போலீஸார் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அகிம்சை முறையில் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் இந்த ஏற்பாடை செய்துள்ளோம். ஆனால் போலீஸார் அத்துமீறி செயல்படுகின்றனர்.
அடுத்தடுத்த மாவட்டங்களில் டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம்.
காங்கிரஸ் காலத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் தற்போது விவசாயத்தை முடக்கும் திட்டங்களை மத்தியஅரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த வேளாண் சட்டம் மூலம் பொதுவிநியோகம் பாதிக்கும். விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரும்பு கொள்முதலில் ஒப்பந்த முறை ஏற்படுத்தப்பட்டதால் தற்போது கரும்பு விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல். உள்ளிட்டவை பெரும் இழப்பை சந்தித்துள்ளன. புதிய சட்டத்திருத்தத்தில் குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த விபரம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பே ஏற்படும்.
மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதே தவறு. தமிழக அரசு ஏனோ இதற்கு காட்டவில்லை.
பணமதிழப்பு மூலம் பொருளாதாரம் பாதித்தது போல, ஜிஎஸ்டி மூலம் வர்த்தகம் பாதித்தது போல இந்த வேளாண் சட்டங்களால் விவசாயம் பாதிக்கும் நிலையே உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.