தமிழகம்

மதுக்கூடமாக மாறிய பொதுப்பணித்துறைக் கட்டிடம்: கேள்விக்குறியாகும் உதயகிரிக் கோட்டை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் இருக்கும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. விஷ ஐந்துக்களின் புகலிடமாக இருக்கும் இந்த கட்டிடம் இப்போது மதுப்பிரியர்களின் மகிழ்விடமாகவும் மாறி வருகிறது.

தக்கலை அருகில் உள்ளது புலியூர்குறிச்சி. இங்கு வரலாற்று ரீதியாகப் பிரசித்திபெற்ற உதயகிரிக் கோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டையானது 81 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள்து. இக்கோட்டையைச் சுற்றி 16 அடி உயர கருங்கல் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் உள்ளே பல்லுயிர்ப் பூங்காவும் அமைந்துள்ளது. இதில் மான், மயில் உள்ளிட்ட உயிரினங்களும் உள்ளன. இதுபோக இங்கு டச்சுப்படை தளபதியாக இருந்தவரும், குளச்சல் போரில் திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்து, திருவிதாங்கூர் படைக்குப் போர் பயிற்சி அளித்தவருமான டிலனாயின் கல்லறையும் உள்ளது.

உதயகிரிக் கோட்டை குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இதனால் இதைப் பார்க்கத் தினமும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இந்த உதயகிரிக் கோட்டையின் மிக அருகிலேயே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தின் நேர் எதிரில் இருக்கும் இந்த கட்டிடம் தொடக்க காலங்களில் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகையாக இருந்தது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்தப் பாரம்பரிய சிறப்புமிக்க கட்டிடத்தை பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளாமலும், பயன்படுத்தாமலும் விட்டுவிட்டனர். இதனால் இப்போது அந்தக் கட்டிடம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவருகிறது.

இதுகுறித்து புலியூர்குறிச்சியைச் சேர்ந்த கதிரேசன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், ''பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கட்டிடம் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலேயே கட்டப்பட்டது. பாரம்பரிய பெருமைமிக்க இந்தக் கட்டிடத்தை பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளாததால் சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. கட்டிடத்தின் சுவர்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. அதைக்கூட வெட்டித் திருத்தவில்லை. அதேபோல் பூட்டியே கிடக்கும் இந்த கட்டிடத்தில் இருந்து மது அருந்துபவர்களும் பெருகி வருகின்றனர்.

கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கட்டிடத்தின் படிகள் எங்கும் மதுபாட்டில்களும், குடித்துவிட்டு வீசிய பிளாஸ்டிக் கப்ப்களும் சிதறிக் கிடக்கின்றன. பொதுப்பணித் துறையினர் இந்தக் கட்டிடத்தைப் புனரமைப்பு செய்து வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களை இதனுள் இயங்கச் செய்யலாம். உதயகிரிக் கோட்டைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இதை உடனடியாகச் செய்ய வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT