விருதுநகர்- சிவகாசி சாலையில் ஆமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து திறக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள். 
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் திறப்பு: தீபாவளிக்காக 75 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை

இ.மணிகண்டன்

தீபாவளி பண்டிகைக்காக சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீசன் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நவ.14-ல் கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி களிலும், புறவழிச் சாலைகளை ஒட்டியும் சுமார் 1,200 பட்டாசு மொத்த மற்றும் சில்லறை விற் பனை சீசன் கடைகள் திறக்கப் பட்டுள்ளன.

பட்டாசு தொழிற்சாலைகள் சார்பில் பல இடங்களில் விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டு 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி சிவகாசி ரயில், பேருந்து நிலையங்களில் ஏராளமான பட்டாசுக் கடை ஏஜெண்டுகள் உள்ளனர். பேருந்தில் வரும் வெளியூரைச் சேர்ந்தவர்களிடம் ஏஜெண்டுகள், பட்டாசு வாங்க வேண்டுமா? என விசாரித்து தங்களுக்குத் தெரிந்த கடைக்கு அழைத்துச் சென்று அதிக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வாங்கித் தருகின்றனர்.

இது குறித்து பட்டாசு விற்பனை யாளர்கள் கூறியதாவது:

தீபாவளிக்காக ஒரு மாதம் மட்டுமே செயல்படும் சீசன் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டும் பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பேருக்கு மட்டுமே பட்டாசுக் கடையை புதிதாகத் தொடங்க வருவாய்த் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அடுத்த வாரம் முதல் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT