புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்த பலர் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டனர். இதனால், புரட்டாசி மாதம் தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை குறைந்திருந்தது.
ஐப்பசி மாதப் பிறப்பை தொடர்ந்து வந்த முதல் ஞாயிறுக் கிழமையான நேற்று சேலம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. கரோனா பரவல் அச்சம் நீடிக்கும் நிலையில், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூடிய மக்கள், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டினர்.
இதனிடையே, புரட்டாசி மாதத்தில் விலை குறைந்திருந்த மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் விலை நேற்று உயர்ந்து இருந்தது. மீன்கள் ரகத்தைப் பொறுத்து கிலோ ரூ.150 முதல் ரூ.600 வரையும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700 வரையும், பிராய்லர் கோழி இறைச்சி ரூ.180 வரையிலும் விற்பனையானது. ஒரு மாதத்துக்கு பின்னர் மீன் மற்றும் இறைச்சி விற்பனை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோட்டில் விலை உயர்வு
ஈரோடு மீன் சந்தையில் நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன் வகைகள் விற்கப்படுகின்றன. கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்ற வஞ்சரம் மீன், நேற்று கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. இதேபோல் வஞ்சரம் பீஸ் ரூ.800, வெள்ளி ரூ.600, விளா ரூ.500, பாறை ரூ.500, சங்கரா ரூ.300, மத்தி ரூ.200, நண்டு ரூ.400, நெத்திலி ரூ.300, இறால் ரூ.500, கிளி மீன் ரூ.350 என அனைத்து வகை மீன்களும் அதிக விலைக்கு விற்பனையாயின.