தமிழகம்

என் களைப்பைப் போக்கிய அருமருந்து 'அன்பு’ : மகன் மறைவு குறித்து மா.சுப்பிரமணியன் உருக்கம்

செய்திப்பிரிவு

தன் மகன் அன்பழகன் மறைவு குறித்து சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பதிவில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் கடந்த செப்.28-ம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது. ஆனால் லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. ஆனால், தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் அக்டோபர் 17-ம் தேதி திடீர் மரணம் அடைந்தார்.

மகன் மறைந்த நிலையில், மா.சுப்பிரமணியத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

தற்போது தனது மகன் மறைவு குறித்து மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பதிவில் மகனுடன் குறிக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுக் கூறியிருப்பதாவது:

"கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பைப் போக்கிய அருமருந்து என் "அன்பு"”.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT