பண்டிகை நாட்களில் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வேவாரியம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 6 மாதங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அடுத்தடுத்து ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை வர உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக ரயில்வே வாரியம் சமீபத்தில் காணொலி மூலம்ஆலோசனை கூட்டம் நடத்தியது.இதையடுத்து, அனைத்து மண்டலங்களிலும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) உயர்அதிகாரிகள் கூறியதாவது:
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை வருவதால், ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ரயில்கள், ரயில் நிலையங்களில் ரோந்துபணிகள், பயணிகளை ஒழுங்குபடுத்தி அனுப்புவது போன்ற பணிக்காக ரயில்கள், ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்களை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். சிறிய ரயில் நிலையங்கள் அவ்வளவாக செயல்படாததால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 30 சதவீதம் கூடுதல் காவலர்களை ஈடுபடுத்த உள்ளோம்.
இதேபோல், ரயில் நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா தொற்று இருப்பவர்கள் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படாது. பொது இடத்தில் எச்சில் துப்புவது, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், சுகாதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.