ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் தமிழக அரசியல் கட்சிகள் ஈகோவை மறந்து ஒன்று சேர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், இலங்கை அரசு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் பேசும்போது நானும் இதை வலியுறுத்தினேன்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை குறித்த விவாதத்தில் உலகின் பல நாடுகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தன. ஆனால், ஈழத் தமிழர் களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட இந்தியா எதுவும் பேசாமல் மவுனம் காத்தது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசு கருதக் கூடாது. உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்களுடன் பிரத மரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி னேன். அதற்கு இதுவரை பதிலே வரவில்லை.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களது அரசியல் வேறுபாடுகள், ஈகோவை மறந்து ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க முடியும்.
இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை இந்தியா ஆதரித் ததைக் கண்டித்து பாஜக கூட்ட ணியில் இருந்து பாமக விலகத் தயாரா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டுள் ளார். ஈழத் தமிழர் பிரச்சினை தீரும் என்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற பாமக தயாராக உள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.