புதுச்சேரி பாகூரில் தள்ளாத வயதிலும் குண்டும், குழியுமான சாலையில் மணல், கற்களை கொண்டு மூடும் பணியில் முதியவர் ஒருவர் ஈடுபட்டார்.
புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூரில் பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, பாகூர்-கன்னியக்கோயில் சாலை, பரிக்கல்பட்டு-குருவிநத்தம் சித்தேரி செல்லும் சாலை போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் மாறியுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதோடு, அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். இதனை சீரமைக்கக்கோரி பல முறை அரசிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் இச்சாலைகள் படுமோசமாக மாறியுள்ளது. இதனால் சாலைகளில் செல்வோர் திக்கித்தடுமாறி அச்சத்துடன் சென்றுவர வேண்டியுள்ளது. இந்த நிலையில் குருவிநத்தம் பாரதி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற 83 வயது முதியவர் பொதுமக்களின் நலன் கருதி பாகூர் சித்தேரி செல்லும் மாஞ்சோலை சாலையில் உள்ள பள்ளங்களை மணல், கற்கள் கொண்டு மூடி வருகின்றார். கடந்த 2 நாட்களாக இந்த பணியில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து இன்றும் (அக். 18) மணல், கற்களை கொண்டு சாலை பள்ளங்களை மூடினார்.
இதுகுறித்து, முதியவர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, "பாகூர் மாஞ்சோலை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதில் செல்பவர்கள் அவதியடைகின்றனர். இரவு நேரங்களில் தெருமின் விளக்கு இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படாமல் தடுக்க என்னால் முடிந்ததை நான் செய்து வருகிறேன். இந்த சாலையில் உள்ள பள்ளங்களை கடந்த மூன்று நாட்களாக மணல், கற்களை கொட்டி மூடி வருகிறேன். அரசு செய்யும் என எதிர்பார்த்தால் இப்போதைக்கு ஆகாது. அதனால் நானே என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று தெரிவித்தார்.