திருப்பத்தூர் அடுத்த தாதன்குட்டை கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர். 
தமிழகம்

கோவையில் இருந்து திருப்பதிக்கு பயணித்த ஹெலிகாப்டர்; பனிமூட்டம் காரணமாக திருப்பத்தூர் அருகே தரையிறக்கம்: வேடிக்கை பார்க்கக் கூடிய பொதுமக்கள்

ந. சரவணன்

கோயம்பத்தூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக திருப்பத்தூர் அருகே இன்று காலை தரையிறக்கப்பட்டது. சாலையோரமுள்ள மலையடிவாரம் அருகே ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அதைக் காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன் (45). இவர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, ரயில் அல்லது கார் மூலம் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்ப முடியாது என நினைத்த நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன் ஹெலிகாப்டரில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு தொழில் அதிபரும், கோவையில் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு இயக்கும் சுனில் என்பவரை தொடர்பு கொண்டு, அவரது ஹெலிகாப்டரில் சீனிவாசன், அவரது மனைவி கவிதா (40), இரு மகன்கள், மகள் என மொத்தம் 5 பேர் கோயம்பத்தூரில் இருந்து இன்று (அக். 18) காலை 7.45 மணிக்கு ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

ஹெலிகாப்டரை பெங்களூருவைச் சேர்ந்த பைலட் எஸ்.கே.சிங், பைரவன் ஆகியோர் இயக்கினர். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தாதன்குட்டை அருகே ஹெலிகாப்டர் வந்தபோது பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரில் சிக்னல் துண்டிக்கப்பட்டு ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்குவதில் பைலட்-களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு மழை பெய்ததால் மேக மூட்டமாக காணப்பட்டது. எனவே, ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்கினால் ஆபத்து நேரிடும் என நினைத்த பைலட் எஸ்.கே.சிங் ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தார்.

அதன்படி, கந்திலி அடுத்த தாதன்குட்டை மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். தாதன்குட்டை கிராமத்தில் ஹெலிகாட்பர் திடீரென தலையிறங்கியதை அறிந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமமக்கள் அதை வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம், கூட்டமாக திரண்டனர்.

தகவலறிந்ததும், கந்திலி காவல் துறையினர், வருவாய் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பனிமூட்டம் காரணமாக சிக்னல் கிடைக்காததால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட தகவலை பைலட்-கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த கூட்டத்தைக் காவல் துறையினர் கலைத்தனர்.

ஹெலிகாப்டர் அருகே சென்று வேடிக்கை பார்த்த கிராமமக்கள் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காலை 11.30 மணிக்கு மேகம் கலைந்து வானம் தெளிவாக தெரிந்த உடன், சீனிவாசன் தன் குடும்பத்தாருடன் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு பயணித்தார்.

SCROLL FOR NEXT