மருத்துவர் ரமேஷ் 
தமிழகம்

புதுச்சேரியில் 33 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தொற்று; இன்று புதிதாக 177 பேர் பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 177 பேருக்குக் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து, கோவிட் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரமேஷ் இன்று (அக். 18) கூறும்போது, "புதுச்சேரியில் 4,072 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 131, காரைக்காலில் 24, ஏனாமில் 6, மாஹேவில் 16 என மொத்தம் 177 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 574 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 33 ஆயிரத்து 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள், புதுச்சேரியில் 1,384 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 39 பேர், மாஹேவில் 68 பேர் என மொத்தம் 1,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 2,295 பேர், காரைக்காலில் 315 பேர், ஏனாமில் 30 பேர், மாஹேவில் 79 பேர் என மொத்தம் 2,719 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 4,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 207, காரைக்காலில் 54, ஏனாமில் 13, மாஹேவில் 32 பேர் என 306 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 290 (85.36 சதவீதம்) ஆக அதிகரித்தள்ளது.

இதுவரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 481 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 851 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது.

இதே நிலை தொடர வேண்டும் என்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடர வேண்டும். அடுத்தடுத்து தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. இதனால் மக்கள் கூடுவதற்கான வாயப்புள்ளது. எனவே அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT