கொடைக்கானலில் முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்த 'அருவி' பட நடிகை அதிதி பாலனுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்த அதிகாரிகளுடனும், செய்தி சேகரித்த செய்தியார்களிடமும் அதிதி பாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரிச் சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (அக். 17) முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்த 'அருவி' பட நடிகை அதிதி பாலனுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதிக்க முயன்ற போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த செய்தியாளர்களிடம் தன்னை வழக்கறிஞர் என்றும் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்றும் செய்தியாளர்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவருக்கு மருத்துவத் துறையினர் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தனர்.