வேலூரில் மண்டல சுற்றுச்சூழல் இணை தலைமைப் பொறி யாளருக்கு லஞ்சப் பணத்துடன் உயர் ரக மதுபாட்டில்களையும் இடைத்தரர்கள் பரிசாக வழங்கி யுள்ள தகவல் தெரியவந்துள்ளது.
வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர்செல்வம் (57). இவர், தங்கியிருந்த காட்பாடி முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 13-ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.33.73 லட்சம் பணமும் மறுநாள் (14-ம் தேதி) ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி பணமும், 3.6 கிலோ தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். தமிழக அளவில்சலசலப்பை ஏற்படுத்திய இந்த சோதனையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற முழு நிகழ்வுகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு பிரத்யே கமாக கிடைத்துள்ளது.
சோதனை முழு விவரம்
வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 13-ம் தேதி காலை 11 மணி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற மண்டல கூட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளின் ஆலோசகர்கள், இடைத்தரகர்கள் மூலம் பன்னீர்செல்வத்துக்கு லஞ்சம் கைமாறும் தகவலின் பேரில் வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக் குழு அலுவலர் ஜோதி மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் மாலை 6.30 மணியளவில் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, கூட்டத்தை முடித் துக்கொண்டு காரில் புறப்பட்ட பன்னீர்செல்வத்தின் காரை காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டின் அருகே காரை மடக்கிய காவல் துறையினர், தங்களை அறி முகம் செய்துகொண்டு சோதனை செய்வதாக கூறியுள்ளனர்.
பன்னீர்செல்வத்தை சோதனை யிட்டதில் ரூ.1,400 பணமும், கார் ஓட்டுநர் விஜயகுமாரிடம் ரூ.3,500 பணமும் இருந்தது. காரின் பின் இருக்கையில் இருந்த நீல நிற பையை சோதனையிட்டதில் ரூ.2.50 லட்சம் பணமும் அலுவலக கோப்புகளுடன், இரண்டு உயர் ரக மதுபாட்டில்கள் இருந்துள்ளன.
இந்தப் பணத்துக்கு உரிய பதில் சொல்லாத பன்னீர்செல்வம் காவல் துறையினர் அருகில் இருந்த தனது வாடகை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டில் சோதனையை தொடங் கியதும் ஹாலில் இருந்த மேஜை டிராயரில் 500, 2,000 ரூபாய் நோட்டு கட்டுகள் ஏராளமாக இருந்ததைப் பார்த்து பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் ரூ.31 லட்சத்து 23 ஆயிரம் தொகை இருந்தது. இதற்கும், பதில் சொல் லாமல் இருந்த பன்னீர் செல்வத் தின் படுக்கை அறையில் சோதனை யிட்டதில் அங்கு பிரான்ஸ் நாட்டின் 3 உயர் ரக மதுபாட்டில்கள் இருந்தைப் பார்த்துள்ளனர்.
மொத்தம் ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் பணத்துடன் கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர்கள் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான 11 முக்கிய கோப்புகள், வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக வருகைப் பதிவேட்டையும் பறிமுதல் செய்தனர். வழக்குக்கு அவசியம் இல்லை என்பதால் மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வில்லை. வாடகை வீட்டை தனது தனி அலுவலகமாக பயன்படுத்தி வருவதாக பன்னீர்செல்வம் கூறி யுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு அலுவலர் ஜோதி, வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் விஜய் ஆகியோர் சாட்சியாக கையெழுத் திட்டுள்ளனர்.
லஞ்சத்துடன் மதுபாட்டில்
பன்னீர்செல்வத்துக்கு பல தொழிற்சாலைகளின் ஆலோச ககர்கள், இடைத்தரர்கள் லஞ்சப் பணத்துடன் உயர் ரக மதுபாட்டில் களையும் பரிசாக வழங்கியுள்ளனர். மதுபாட்டில்களை வாடகை வீட்டில் வைப்பதுடன் பணத்தை மட்டும் அவ்வப்போது, ராணிப்பேட்டை யில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் சென்று மூட்டைகளில் கட்டி வைத் துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.