மாணவ, மாணவியரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் இருவரை ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக அருள்மணி (42), ஆசிரியையாக சரண்யா (37) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் பயிலும் ஏழை இந்து மாணவ, மாணவியரை கிறிஸ்தவ மதத்துக்கு மத மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த சுந்தர நாராயணன் தலைமையிலான பாஜகவினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டார கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரு ஆசிரியைகளின் அறை மற்றும் அவர்களது மேஜை மீதிருந்து கிறிஸ்தவ மத போஸ்டர், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, உதவி தலைமை ஆசிரியை அருள்மணி, ஆசிரியை சரண்யா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.