தமிழகம்

நீட் தேர்வு முடிவுகளை குழப்பம் இல்லாமல் வெளியிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய நீட் தேர்வு போன்ற முக்கிய தேர்வு முடிவுகள் 100% சதவிகிதம் முறையான, சரியான, நியாயமான முறையில் வெளியிடக்கூடிய நம்பகத்தன்மையை மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள், அதை உறுதிப்படுத்துவது தேசிய தேர்வு முகமையின் கடமையாகும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்”

கரோனா காலத்தில் மாணவர்கள் நீட் தேர்வு முக்கியத்தும் கருதி கிராமபுற, நகர்புற மாணவர்கள் சர்ச்சைகளை தாண்டி தங்களுடைய வருங்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி இந்த தேர்வில் வெல்ல வேண்டும் என்று கடின உழைப்பை மேற்கொண்டு, கரோனா கோட்பாடுகளுக்கு உட்பட்டு, தேர்வை பல சிரமத்திற்கு இடையில் எழுதினார்கள் என்று நினைவு கூற விரும்புகிறேன்.

நேற்றைய தினம் நீட் தேர்விற்கான முடிவுகள் வெளிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தேர்வாவானவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபாடுகளால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தெலங்கானா, உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் வெளிவந்த புள்ளிவிரங்கள் மாறுபடுகிறது.

மேற்கொண்டு தேர்வு ஆணையம் தேர்வு அறிப்புகளை நிறுத்தி வைத்து மீண்டும் முடிவுகள் அறிக்கப்பட்டு இருக்கிறது இதனால் மாணவர்களிடையே, குழப்பமும், அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தேர்வு முடிவுகளில் நம்பகத்தை குறைகிறது.

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய நீட் தேர்வு போன்ற முக்கிய தேர்வு முடிவுகள் 100% சதவிகிதம் முறையான, சரியான, நியாயமான முறையில் வெளியிடக்கூடிய நம்பகத்தன்மையை மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது தேசிய தேர்வு முகமையின் கடமையாகும்.

தற்பொழுது திருத்தப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மாணவர் ஸ்ரீஜன் தமிழகத்தில் முதலிடத்ததையும், அகில இந்திய அளவில் 8 –வது இடத்தையும் பிடித்துள்ளார்.

அதேப் போல் மாணவி மோகன பிரபா தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும், அகில இந்திய அளவில் 52வது இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் தேசிய தேர்வு முகமை சரியான முன்னேற்பாட்டுடன், குழப்பம் இல்லாமல் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT