தென்காசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்புராஜ் (26) என்ற இளைஞர் கடந்த மார்ச் மாதம் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் ராமலட்சுமி (40), இது தொடர்பாக சுப்புராஜ் மற்றும் அவரது பெற்றோர் சுந்தர்ராஜ் (56), மாரியம்மாள் (49) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்கள் பேரம் பேசியுள்ளனர்.
இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்றும், கருவை கலைக்க ரூ.2 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட ராமலெட்சுமி, தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதை அறிந்த அப்பகுதி கிராம மகளிர் நல அலுவலர், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சரஸ்வதி விசாரணை நடத்தி, சுப்புராஜ் மற்றும் அவரது பெற்றார் சுந்தர்ராஜ், மாரியம்மாள், மற்றும் சிறுமியின் தாயார் ராமலெட்சுமி ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட சுப்புராஜ் கடந்த 5 மாதத்துக்கு முன்பு தனது உறவினர் மகளான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருந்தவர் கடந்த மாதம் தான் ஜாமீனில் வந்துள்ளார். தற்போது மீண்டும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.