புதுச்சேரியில் இன்று புதிதாக 222 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (அக். 17) கூறும்போது, "புதுச்சேரியில் 4,209 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-190, காரைக்கால்-14, ஏனாம்-4, மாஹே-14 என மொத்தம் 222 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வம்பாகீரப்பாளையம் துப்புராயப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, தவளக்குப்பத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர், ரெயின்போ நகரைச் சேர்ந்த 76 வயது முதியவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 574 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 32 ஆயிரத்து 978 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,410 பேர், காரைக்காலில் 80 பேர், ஏனாமில் 49 பேர், மாஹேவில் 67 பேர் என மொத்தம் 1,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 2,359 பேர், காரைக்காலில் 332 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் 96 பேர் என மொத்தம் 2,814 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 4,420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 180, காரைக்காலில் 53, ஏனாமில் 19, மாஹேவில் 61 பேர் என 313 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 984 (84.86 சதவீதம்) ஆக அதிகரித்தள்ளது.
இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 482 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 94 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.