அதிமுக தொடக்க விழாவையொட்டி புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 
தமிழகம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

கே.சுரேஷ்

நீட் தேர்வு முடிவு வெளியீடு விவகாரத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியையொட்டி இன்று (அக். 17) புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

"பிற நாடுகள், மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும்கூட தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு கட்டுக்குள்தான் உள்ளது. சவால் நிறைந்த காலகட்டங்கள் இனிமேல்தான் தொடங்குகின்றன. பண்டிகை காலம், பருவமழை காலங்கள் தொடங்க உள்ளன. மேலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், உரிய இடைவெளியைப் பின்பற்றினாலே 2-ம் கட்ட கரோனா பாதிப்பைத் தவிர்த்துவிடலாம்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரியை கொண்ட மாநிலம் தமிழகம்தான். அதனால் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்.

ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

ரெம்டெசிவர், லோபினாவிர், ரிட்டோனாவிர் போன்ற கரோனா தடுப்பூசிகள் ஆரம்பக் காலகட்டத்தில் நல்ல பலனை அளிக்கிறது என்பதுதான் தமிழக சுகாதாரத்துறையின் நிலைப்பாடாக உள்ளது. நோய்த் தன்மை தீவிரமடைந்துள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் பயன் அளிக்கவில்லை என்ற ஐசிஎம்ஆரின் கருத்திலும் நாங்கள் உடன்படுகிறோம்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT