தமிழகம்

40 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு: சர்வதேச உணவு தின விழாவில் வேளாண் கல்லூரி முதல்வர் கவலை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சர்வதேச அளவில் 40 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக உணவு தின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மதுரை வேளாண் கல்லூரி முதல்வர் வி.கு.பால்பாண்டி கவலை தெரிவித்தார்.

மதுரை வேளாண்மை கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அகில இந்திய ஒருகிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் இன்று உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பேராசிரியர் மற்றும் தலைவர் குடும்ப வளமேம்பாட்டுத்துறை தலைவர் பேராசிரியர் பி.பரிமளம் வரவேற்றார். உலக உணவு தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். எஸ்.அமுதா பேசினார். அவர் பேசுகையில், கரோனா பெருந்தொற்று போன்ற இந்த காலங்களில் சுத்தமான மற்றும் ஆராக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று கூறி அந்த உணவு வகைகளின் பட்டியலை எடுத்துக் கூறினார்.

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பேராசிரியர் வி.கு.பால்பாண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், ‘‘அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும். அதற்கு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 2030ல் பஞ்சம் இல்லாத ஒரு நாடாக இந்தியாக திகழ வேண்டும். உணவில் தன்னிறைவை அடைந்த போதிலும், ஊட்டச்சத்தில் தன்னிறைவை அடையவில்லை. எனவே, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உலகளவில் 40 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பெற்றோர்கள் பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுகள், பயறு வகைகள், பழங்கள், முட்டை உணவுகளைச் தங்களுக்கும், குழந்தைகளுக்கும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் செலவினைக் குறைத்து இரண்டு மடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு வருமானத்தை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும், ’’ என்றார்.

உணவியல் மற்றும் சத்தியல் துறை தலைவர் பேராசிரியர் ஹேமலதா, ஆடை மற்றும் வடிவமைப்புத்துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணக்குமார், விரிவாக்க கல்வி மற்றும் தகவல் மேலாண்மை துறை தலைவர் இணைப்பேராசிரியர் அ.ஜானகிராணி,

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பலதரப்பட்ட தானிய உணவு வகைகள், சத்துஉருண்டைகள், சிறுதானிய பால்,கேழ்வரகு பொறி போன்றவை அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT