தமிழகம்

பி.ஏ.பி. கண்ட வி.கே.பழனிசாமிக்கு ரூ.1 கோடியில் மணி மண்டபம்: அமைச்சர் வேலுமணி அடிக்கல் நாட்டினார் 

கா.சு.வேலாயுதன்

பொள்ளாச்சி ஆழியாற்றில், வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஆசியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாகப் பெயர் பெற்றது பி.ஏ.பி எனப்படும் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வரப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர் வி.கே.பழனிசாமி கவுண்டர்.

ஆனைமலையின் மேற்குப் பகுதியில் உருவாகிப் பெருக்கெடுக்கும் நீர், யாருக்கும் பயனின்றிக் கடலில் கலக்கும் தண்ணீரைத் திருப்பிக் கீழே கொண்டும் வரும் திட்டம் குறித்துத் தொடர்ந்து சிந்தித்து 1937-ல் முதன்முறையாக சட்டப்பேரவையில் அதற்காகக் குரல் எழுப்பிய முதல் எம்எல்ஏ இவர்தான். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பரம்பிக்குளம் திட்டம் பற்றியே பேசியவர். அவரின் தொடர் முயற்சிகளும், வற்புறுத்துதல்களும் பின்னாளில் பயனளித்தன. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராசர் பொதுப்பணித் துறையிடம் இத்திட்டத்தை ஆராயுமாறு உத்தரவிட்டார்.

அப்போது மலைப்பகுதியில் மேலே செல்வதற்குப் பாதைகள் ஏதும் கிடையாது. மலைவாழ் மக்களும் யானைகளும் பயன்படுத்தும் பாதை ஒன்றுதான் இருந்தது. இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய வி.கே.பழனிசாமி மற்றும் பொறியாளர் குழுவினர் யானைகளின் மீதேறிப் புறப்பட்டார்கள். ஆய்வு செய்த பொறியாளர் குழுவினர் திட்டம் தொடர்பாகச் சாத்திய அறிக்கையினை அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பகுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இன்று பாசனப் பயன் பெற்று வருகின்றன.

மழையின்றி வளம்குன்றி இருந்த பகுதிகளெல்லாம் இத்திட்டத்தில் வரவால் பாசன வசதி பெற்றன. உணவு உற்பத்தி பெருகியது. விவசாயிகளின் நிலை உயர்ந்தது. பொதுநல நோக்குடன் செயல்பட்டதால் வி.கே.பழனிசாமியின் கனவு பல்லாண்டு முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேறியது. அப்போது இருந்து இப்போது வரை பரம்பிக்குளம் திட்டம் என்றாலே பிஏபி விவசாயிகளுக்கு வி.கே.பழனிசாமி எனும் பெயரே நினைவுக்கு வரும். அவர் கடந்த 1971-ம் ஆண்டு மறைந்தார்.

இதற்கிடையே கடந்த 14.02.2019 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் விதி எண் 110-ன் கீழ் வி.கே.பழனிசாமியைச் சிறப்பு செய்யும் விதமாக கோவை மாவட்டத்தில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், ஒரு நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இன்று மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

''2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வேளாண் துறைக்கு ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, வேளாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழக அரசின் சிறந்த செயல்பாட்டின் காரணமாக உலக வேளாண் விருது, ‘ஸ்கோச் விருது” உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கான திட்டங்களைப் பெற்றுத் தருவதற்கு அரும்பாடுபட்டவர்கள் பலர். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியார் அணைத் திட்டத்திற்குப் பாடுபட்டவர்தான் வி.கே.பழனிசாமி. உலகத்து உயிர்களுக்கு எல்லாம் வாழ்வளிப்பது உணவே ஆகும். அந்த உணவை வழங்கும் நிலமும், நீரும் இணைந்திருப்பது மிக மிக அவசியம்.

தென்கொங்கு நாட்டின் வறண்ட நிலங்களை எல்லாம் வளமான பூமியாக மாற்றிய பெருமை இத்திட்டத்துக்கு உண்டு. இத்திட்டத்திற்கு அடிதளமாக இருந்தவர் வி.கே.பழனிசாமி. கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே, விவசாயிகளின் காவலனாக இருந்த விவசாயப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுகிறது''.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரிவாசு, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT