போலி மருத்துவர்கள், வழக்கறிஞர்களை அனுமதிப்பது சமூகத்தில் பெரிய தீங்கை ஏற்படுத்தும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் மருத்துவமனை நடத்திவந்தார். இவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு போலீஸார் சீல் வைத்தனர். இவர் மீது 2018-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை நீக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஜெயபாண்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கைது செய்யப்படாதது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
மனுவை திரும்பப் பெற அனுமதி மறுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் நீதிமன்றத்தில் போலி சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ளார். இதனால் மனுவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது. மனுதாரர் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலி மருத்துவர்கள், போலி வழக்கறிஞர்களை அனுமதிப்பது சமூகத்தில் பெரிய தீங்கை ஏற்படுத்தும். விசாரணை நவ. 19-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.