‘‘தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா?’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், நடப்பு ஆண்டில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு இழைக்கும் மன்னிக்க முடியாத துரோகம். பாஜக சமூகநீதிக்கு எதிராக செயல்படும் கட்சி.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அவரிடமிருந்து எந்த பதலும் இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமரை சந்தித்து உள் ஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சரவை நிறைவேற்றும் எந்த தீர்மானத்தையும் ஆளுநர் ஏற்பதில்லை. இது தமிழக அரசை அவமதிக்கும் செயல். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா சூரத்தனமாக தன்னிச்சையாக செயல்படுகிறார்.
மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்படும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது.
மூன்று விவசாய மசோதாக்கள், மின்சார சட்டத் திருத்தம் என நாட்டு மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
மின்துறை தனியார் வசம் சென்றால் தற்போது தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், குடிசைவாசிகள் போன்றோருக்கு அளிக்கப்படும் மின்சார சலுகை பறிக்கப்படும். ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது, அதனால் ஏற்படும் இழப்பை மாநில அரசுகளுக்கு தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
தற்பாது இழப்பீடை தராமல் மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ள அனுமதிப்பதாக கூறுகிறது. பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாநில அரசுகளுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் மத்திய அரசுக்கு மனமிருந்தால் மார்க்கமுண்டு. மத்திய அரசு சமூகநீதிக்கு எதிரான கொள்கை கொண்டது. அது ஆர்எஸ்எஸ் கொள்கையை செயல்படுத்தி வருகிறது.
டெல்டா குறுவை சாகுபடியில் விளைச்சல் அதிகரித்துள்ளது. அவர்களிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வது அரசின் கடமை. இல்லாவிட்டால் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் செல்வர்.
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது.
அதிமுக இந்தத் தேர்தலில் வெற்றி பெறாது.திமுக கூட்டணி கட்சிகள் கொள்கை ரீதியாக கூட்டணியை வைத்துள்ளன. திமுக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும். சில பத்திரிகைகள் கூட்டணியை குலைக்க முயற்சித்து வருகின்றன. அது நடக்காது.
சங்ககால சிறப்புடைய பிரான்மலையை அரசு மீட்க வேண்டும். தனியாருக்கு பட்டா கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும்.
காளையார்கோவில் அருகே கிழவனூரில் மயானத்திற்கு பாதை இல்லாமல் வயல்வெளிகளில் செல்கின்றனர். மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாவட்டச் செயலாளர் கண்ணகி உடனிருந்தனர்.