அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 287 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 287 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 16) கூறும்போது, "புதுச்சேரியில் 4,287 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-236, காரைக்கால்-28, ஏனாம்-16, மாஹே-7 என மொத்தம் 287 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி காந்தி நகரை சேர்ந்த 59 வயது நபர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 32 ஆயிரத்து 766 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,439 பேர், காரைக்காலில் 91 பேர், ஏனாமில் 47 பேர், மாஹேவில் 76 பேர் என 1,653 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 2,333 பேர், காரைக்காலில் 360 பேர், ஏனாமில் 44 பேர், மாஹேவில் 134 பேர் என 2871 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 158, காரைக்காலில் 85, ஏனாமில் 13, மாஹேவில் 50 பேர் என 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 671 (84.45 சதவீதம்)ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 195 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 965 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

அறிகுறியுள்ள நபர்களுக்கு மட்டும் பரிசோதனை

அனைத்து துறைகளும் கரோனா தொற்று தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால், சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு தருவது 2, 3 துறைகள் தான். அந்த துறைகளில் கூட 5 முதல் 10 சதவீதம் ஊழியர்கள் தான் கரோனா தொடர்பான பணியில் ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால், சுகாதாரத்துறை மட்டும் தான் கரோனா பணியில் ஈடுபடுகிறது.

அடுத்து வாரம் முதல் கரோனா தொடர்பான பணியில் பிற துறைகள் ஈடுபடுத்தப்பட மாட்டாது. கரோனா தொடர்பான பணிக்குக் கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டால் உரிய அனுமதியுடன் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று காலை நான் நடைபயிற்சி மேற்கொண்டபோது ஒரு இளைஞர் என்னை சந்தித்து, 'எனக்கு கரோனா வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது 'நெகட்டிவ்' என்று தெரிவித்தனர். ஆனால், வேலை செய்யும் இடத்தில் ரிப்போர்ட் கேட்கின்றனர்' என்றார். இதுபோல் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு என்னென்ன பிரச்சினை உள்ளது என்று கண்காணிப்பு குழு சென்று பார்த்த பிறகுதான் தெரியும்.

அதற்காக ஆய்வை ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளேன். புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்துவிட்டனர். வியாபாரம் நன்றாக நடைபெறுகிறது. இதனால் அடுத்த வாரம் முதல் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT