இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை.
ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும். திரைப்படத் துறையைப் பொருத்தவரை அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தற்போது திரையரங்கில் திறப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இது நடைமுறைக்கு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் தமிழக அரசு கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்று அதன் பின்னர் திரையரங்குகள் திறந்தால் தான் சரியாக இருக்கும்.
நான் திங்கட்கிழமை சென்னை சென்றவுடன் ஓரிரு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதில் அவர்களது கருத்துகளை தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும்.
பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு வரும்” என்றார் அவர்.