தமிழகம்

ரஜினி இயக்கம் - ஆர்எம்ஆர் பேரவை கூட்டணி குறித்த தகவல்கள் தவறானவை: மதுரை விமான நிலையத்தில் ராம்மோகன் ராவ் பேட்டி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

ரஜினி இயக்கம் - ஆர்எம்ஆர் பேரவை கூட்டணி குறித்த தகவல்கள் தவறானவை என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் மற்றும் டாக்டர் ஆர்எம்ஆர் பாசறையின் நிர்வாகியுமான டாக்டர் ராம் மோகன் ராவ் தெரிவித்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாஞ்சலி நிகழ்வுக்கு செல்லும் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு மதுரை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் நினைவிடத்தில் 221-வது நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராம் மோகன் ராவை பாசறை நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியளர்களிடம் பேசிய ராம்மோகன் ராவ், "ஆர்எம்ஆர் பாசறை சார்பில் சமுதாய விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களை ஆண்டுதோறும் கவுரவிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டே கட்டபொம்மன் நினைவஞ்சலியைக் கொண்டாடத் திட்டமிட்டோம். ஆனால், பலத்த மழையின் காரணமாக கடந்தாண்டு வரமுடியவில்லை.

இந்தாண்டு 221-ம் ஆண்டு நினைவஞ்சலியை சிறப்பாகக் கொண்டாட பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களை கவுரவிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.

வைரஸ் தொற்று காலத்தில் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது, அரசைப் பாராட்டி ஆகவேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அப்போது பேசுவோம் ரஜினி இயக்கம் மற்றும் ஆர்எம்ஆர் பேரவை கூட்டணி குறித்த தகவல் விவாதங்கள் தவறானவை" என்று கூறினார்

SCROLL FOR NEXT