பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப் படும் என சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயூஎம்எல்) தேசிய செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் இ.அகமது தலைமையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபுபேலஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாள் கூட்டம் நேற்று நிறைவடைந் தது. இக்கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
‘பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் இந்தியர்கள் அனைவரையும் இந்துக்கள் என்று கூறுவது, கட்டாய மதமாற்றம், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது உள்ளிட்ட விஷயங்களை கண்டித்து செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஐயூஎம்எல் தமிழக தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கேரள மாநில தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் மற்றும் ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.