சேலம் ரேஷன் கடையில் பயோமெட்ரிக் சர்வர் பிரச்சினையால், ரேஷன் பொருட்கள் சரிவர வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை கார்பெட் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் (ஏடிஓ-10) அப்பகுதியைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’, திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் சர்வர் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் பொன்னம்மாப்பேட்டை, கார்பெட் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், சர்வர் பிரச்சினை காரணமாக பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கடை ஊழியர் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “இங்கு பணிபுரியும் ஊழியர் இரண்டு கடைகளில் பணிபுரிவதால் மதியம் ஒரு மணிவரை மட்டுமே இந்த கடை திறந்து இருக்கும்.
இதனால், நாங்கள் காலை நேரத்தில் எங்கள் வேலைகளை விட்டு இங்கு வந்தால், பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை. தற்போது, சர்வர் பிரச்சினையால் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.