உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி வட்டார கிராமங்களின் வழியே செல்லும் மலட்டாற்றில் புனரமைப்பு பணிகளுக்காக ரூ.15.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருக்கோவிலூர் அணையில் இருந்து பிரிந்து செல்லும் மலட்டாறு விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் வாலாஜா ஆற்றில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 40 கிலோமீட்டர் ஆகும்.
மலட்டாற்றின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பையூர், மழவராயனூர், சிறுவனூர், ஏமப்பூர், கண்ணாம்பட்டு, காரப்பட்டு, ஆனத்தூர் ஆகிய 7 கிராமங்களிலும், கடலூர் மாவட்டத்தில் சிறுகிராமம் வீரபெருமாநல்லூர், நத்தம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், சேமக்கோட்டை, இலந்தம்பட்டு, திருவாமூர், சிறுவத்தூர் ஆகிய 9 கிராமங்களிலும் 4 ஆயிரத்து 174 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அரசூர், காரப்பட்டு,தணியாளம்பட்டு, ஆனத்தூர், ஒரையூர், கரும்பூர், கயப்பாக்கம், திருத்துரையூர், பூண்டி மற்றும் புலவனூர் ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.
வெள்ளத்தால் உருவான மணல் மேடு
மலட்டாற்றில் வெள்ளத்தின் காரணமாக மணல் மேடுகள் ஆற்றின் குறுக்கே படிந்து, சிறு செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் ஆற்றின் கடைசிப் பகுதிக்கு செல்ல இயலாமல் உள்ளது. இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 பாலங்கள் மிகவும் பழமையானதாகவும், உடைந்தும், நீர் செல்லும் வழி குறைவாகவும் காணப்படுகிறது. மற்ற பாலங்களில் ஆற்றின் இருபுறமும் மணல் சரிந்து பாலத்தின் வழியாக தண்ணீர் செல்லத் தடையாக உள்ளது.
இந்த நிலையில் 2018-2019 ம் ஆண்டு பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மலட்டாற்றை புனரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடந்து பொதுப்பணித்துறை சார்பில் ரூ.15.04 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து மலட்டாற்றில் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு மணல் மேடுகளை அகற்றி வாய்க்கால் வெட்டவும், கிராமங்களை இணைக்கும் பாலங்களின் இருபுற மும் கேபியான் தடுப்புசுவர்களை கட்டவும், உடைந்துள்ள பாலங் களை புதியதாக கட்டவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் மூலம் மலட்டாற்றில் கடைசிபகுதி வரை தண்ணீர் செல்லும். மேலும் இந்த ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகளில் நீர் அதிகரிக்கும்.
கடந்த 2 மாதங்களாக பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள் பாலமுருகன், மோகன் ஆகியோர் தலைமை யிலான அதிகாரிகள் மலட்டாற்றில் பண்ருட்டி அருகே உள்ள புலவனூரில் பாலம் கட்டும் மற்றும் வாய்க்கால் வெட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கடலூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.