திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் சிவன் அருள். 
தமிழகம்

அரசு இடத்தை காலி செய்ய வருவாய் துறையினர் நோட்டீஸ்; திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாற்று இடம் ஒதுக்கீடு செய்வதாக ஆட்சியர் சிவன் அருள் உறுதி

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் அரசு இடத்தை காலி செய்ய வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அளித்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொது மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப்பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சி கள் உள்ளன. இங்கு, 32 குக்கிராமங் கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலித்தொழில், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களை மலை வாழ் மக்கள் செய்து வருகின்றனர். பட்டா இடத்திலும், வனத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் வீடு கட்டியும் சிலர் வசித்து வருகின்றனர்.

அதேபோல, மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் சிலர் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட ஊராட்சிகளில் அரசுக்கு சொந்த மான இடத்தில் வீடு கட்டியும், பெட்டிக்கடை, உணவகம், தேநீர் கடை உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதூர்நாடு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு நாட்களில் புறக்காவல் நிலையம் திறப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த இடத்துக்கு அருகே மலைவாழ் மக்கள் அல்லா தவர்கள் 20 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். பேருந்து நிலையம் அமைக்க இருப்பதால் அரசுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினர் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால், இடத்தை காலி செய்ய மறுத்த 20 குடும்பத்தார் அங்கேயே தங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர், நில அளவையினர் புதூர்நாடு பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, அரசு இடத்தை காலி செய்யாவிட்டால் வீடு மற்றும் கடைகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஆட்சியர் சிவன் அருளை முறையிட்ட பொதுமக்கள், தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

மனுவை பெற்ற ஆட்சியர் சிவன் அருள், "உங்களுக்கு மட்றப்பள்ளி அல்லது மேற்கத்தியானூர் போன்ற இடங்களில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதூர்நாடு பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது" என்றார். இதனையேற்று, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT