தமிழகம்

‘ஆத்மநிர்பர்’, ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களை மேம்படுத்த எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுக்காக புதிய இணையதளம் விரைவில் உருவாகிறது

செய்திப்பிரிவு

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின்கீழ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் குறித்து தெரிவிக்கும் ஒருங்கிணைந்த நம்பகமான இணையதளத்தை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின்படி ‘மக்களுக்கு சிறந்ததை வழங்குதல்’ என்ற கருப்பொருளுடன் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்படும்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்முன்முயற்சியாக, புதிய தொழில்முனைவோர், ஏற்கெனவே இருக்கும் உற்பத்தியாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய இந்த இணையதளம் வாய்ப்பை ஏற்படுத்தும்.

புதிய இணையதளத்தை உருவாக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, கெயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்புக் குழு வழங்கும் ஆலோசனைப்படி, இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும்.

இணையதளம் உருவாக்கும் பணியைமத்திய பெட்ரோலிய அமைச்சர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற வெப்பினார் கூட்டத்தில், புதிய இணையதளத்தில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அத்துறை செயலர் தருண் கபூர் ஆகியோர் அறிவுரைகளை வழங்கினர்.

SCROLL FOR NEXT