தமிழகம்

கேரள தங்க கடத்தலில் கைதானவர்களுக்கு தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதானவர்களுக்கும் தாவூத் இப்ராஹிமின் ‘டி’ என்ற அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சுங்கத் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகிய 3 மத்தியக் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது என்ஐஏ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலருக்கு சர்வதேச தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அதில், கே.டி.ரமீஸ் என்பவருக்கு சர்வதேச கடத்தல் கும்பல் தலைவனான தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

தாவூத் இப்ராஹிமின் ‘டி’ என்ற அமைப்பு இப்போதும் செயல்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான்சானியாவில் இருந்து தங்கம்,ஆயுதங்கள், போதைப் பொருட்களை பல்வேறு நாடுகளுக்குக் கடத்துகின்றனர். ரமீஸ் அடிக்கடி தான்சானியாவுக்குச் சென்று வந்த விவரங்கள் கிடைத்துள்ளன. அங்குசெல்லும் இவர் ‘டி’ அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து தங்கம்,ஆயுதங்களை வாங்கி இந்தியாவுக்குக் கடத்தி கொண்டு வந்துள்ளார்.கடந்த ஆண்டு கொச்சி விமான நிலையம் வழியாக இவர் 13 துப்பாக்கிகளைக் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT