ஆர்.சுதா 
தமிழகம்

காங்கிரஸ் மீதான விமர்சனத்தை குஷ்பு நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் மீதான விமர்சனத்தை குஷ்பு நிறுத்திக் கொள்ளாவிட்டால் உரிய பதிலடி தரப்படும் என்று தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்கத் தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸில் இணைந்தபோது என்\னென்ன மரியாதை தரப்பட்டது என்பது அவருக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் இணைந்தார். ஆனால், பாஜகவில் பத்தோடு பதினொன்றாக இணைந்துள்ளார்.

உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை என்று குஷ்பு கூறியிருக்கிறார். அடிமட்ட தொண்டர்களாக இருந்து இன்று காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கும் ஜோதிமணி, விஜயதரணி போன்றவர்களை குஷ்புக்கு தெரியாதா?

பின்தங்கிய கிராமத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நான், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் என படிப்படியாக உயர்ந்து இன்று மகளிரணி தலைவியாகி இருக்கிறேன். எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்புக்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை.

அழுத்தத்துக்கு உட்பட்டோ அல்லது எந்த பலனை எதிர்பார்த்தோ பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளார். அது அவரது விருப்பம். அதற்காக காங்கிரஸை களங்கப்படுத்த முயற்சிக்க வேண்டாம். 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்ததை நினைவுகூர்ந்து விமர்சனங்களை குஷ்பு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உரிய பதிலடி கிடைக்கும் என்றார்.

SCROLL FOR NEXT