“குறைந்தது 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று எண்ணிக்கை நிபந்தனை விதிப்பது சரியல்ல என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நேசன் தொடர்ந்த ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், “இந்த பொது நல வழக்கு பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் சார்ந்த அரசியல் கட்சி எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது? இதுபோன்ற லெட்டர் பேட் அரசியல் கட்சிகளால் பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி என அனுமதி வழங்க வேண்டும்" என்று ஆலோசனை கூறினர். மேலும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், உள்துறை, சட்ட அமைச்சகங்களை எதிர் மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இன்று பேரியக்கமாக உள்ள காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது, 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கவில்லை. எனவே உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிபந்தனையாக வைக்காமல், அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு விரோதம் இல்லாமல், ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை மீறாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: குறைந்தது 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அரசியல் கட்சி என அனுமதி வழங்க முடியும் என்று நிபந்தனை விதிப்பது சரிவராது. ஒரு கட்சியை தொடங்க வேண்டுமானால் ஒரு கொள்கையை அறிவித்து மக்களை அணுக வேண்டும்.அதன்பிறகே அந்த கொள்கை பிடித்திருந்தால் உறுப்பினர்கள் சேருவார்கள். கட்சியே தொடங்காமல் மக்களை அணுகி உறுப்பினர்களை திரட்டுவது சாத்தியமற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: குறைந்தது 25 ஆயிரம் உறுப்பினர்களை காட்டினால்தான் அரசியல் கட்சி என அனுமதி வழங்க முடியும் என்றால் யாராலும் கட்சியைத் தொடங்க முடியாது. எனவே, அப்படி நிபந்தனை விதிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதேபோல எந்தக் கொள்கையும் இல்லாமல் கட்சி தொடங்குவதைத் தடுப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுக்கலாம்.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நீதிபதிகள் கூறியிருப்பது போன்ற நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கலாம். அரசியல் கட்சி என அனுமதி வழங்கவே இதுபோன்ற நிபந்தனை என்பது இந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறையை பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவாகக் கூறும்போது, “25 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க ஒரு அரசியல் கட்சிக்கு நியாயமான ஒரு காலக்கெடுவை வழங்கலாம். அந்த காலக்கெடுவுக்குள் அவர்களால் குறிப்பிட்ட உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனால், அந்தக் கட்சிக்கு அரசியல் கட்சி என்ற அனுமதியை ரத்து செய்யலாம்" என்றும் யோசனை தெரிவிக்கின்றனர்.