பிஆர்பி நிறுவனம் மீதான நரபலி புகார் தொடர்பாக, மதுரை அருகே நேற்று 3-ம் நாளாக மயானத்தைத் தோண்டியதில் எலும்புத் துண்டுகள் கிடைத்தன. இன்றும் தோண்டும் பணி நடைபெறுகிறது.
பிஆர்பி நிறுவனம் மீதான நரபலி புகார் தொடர்பாக, மேலூர் அருகே இ.மலம்பட்டியில் உள்ள மயானத்தில் தோண்டும் பணி நடக்கிறது. கடந்த செப்டம்பர் 13-ம் தேதி 4 சடலங்களின் எலும்புகள், மண்டை ஓட்டுடன் கிடைத்தன. நேற்று முன்தினம் மேலும் 2 சடலங்களின் எலும்புகள் கிடைத்தன. நேற்று 3-ம் நாளாக தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி, மேலூர் டிஎஸ்பி மங்களேஸ்வரன், சட்ட ஆணையர் சகாயம் ஆய்வுக்குழுவின் உறுப்பினர்கள் ஆல்பர்ட், வேலு ஆகியோர் முன்னிலையில் நேற்று தோண்டும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 12 பேர் ஈடுபட்டனர். மாலை வரை 8 அடி ஆழம் தோண்டப்பட்டது. இதில் சில எலும்புத் துண்டுகள் மட்டும் கிடைத்தன. சடலத்தின் முழுமையான எலும்புகள், மண்டை ஓடு எதுவும் சிக்கவில்லை. இன்றும் தோண்டும் பணி தொடர்கிறது.
இதுகுறித்து சகாயம் ஆய்வுக்குழு அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘கோடிட்டு அடையாளம் காட்டப்பட்ட இடம் வரை முழுமையாகத் தோண்டப்பட வேண்டும். இன்றுடன் இப்பணி முடியும் என எதிர்பார்க்கிறோம். பணிகளை முழுமையாக கண்காணித்து வருகிறோம்’ என்றார்.