அம்பத்தூர் அருகே மினி விழா கூடத்துக்கு மின் இணைப்பு அளிக்க ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் அருகே உள்ள முகப்பேர் கிழக்கு, வீரமாமுனிவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரரேசன்(60). பில்டரான இவருக்கு சொந்தமான கட்டித்தின் கீழ் தளத்தை மினி விழா நடத்தும் கூடமாக மாற்ற திட்டமிட்டார். இந்தக் கூடத்துக்கு மின் இணைப்புக் கேட்டு, முகப்பேர் கிழக்கு துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்வாரிய முகப்பேர் மையப் பிரிவு உதவி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தார். பல முறை அலைந்தும் மின் இணைப்புக் கிட்டவில்லை.
இந்நிலையில், உதவி பொறியாளர் சரவணன் (38) மின் இணைப்பு வழங்க, சுந்தரேசனிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசி, கடைசியாக ரூ.70 ஆயிரம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத சுந்தரேசன், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
ரசாயனம் தடவிய நோட்டு
போலீஸாரின் அறிவுறுத்தலின் படி நேற்று காலை சரவணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த துணை கண்காணிப்பாளர் ரவி, ஆய்வாளர்கள் ராஜா, நிவாசன், சங்கர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.