தமிழகம்

அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் வசூல்; ஆம்பூரில் தொண்டு நிறுவனத்தினரிடம் போலீஸார் விசாரணை

என்.சரவணன்

அரசு வேலைக்காக போலி நேர்முகத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்த தொண்டு நிறுவன அமைப்பு நிர்வாகிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் தொண்டு நிறுவன அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று (அக்.15) காலை அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், ஆம்பூர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் திருமால் ஆகியோர் அங்கு வந்து, நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினார்.

அப்போது, அரசு வேலைக்காக போலி நேர்முகத் தேர்வு நடத்தப்படுவது தெரியவந்தது. நேர்முகத் தேர்வில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல், அரசு முத்திரையுடன் கூடிய தாளில் அச்சடிக்கப்பட்டு தொண்டு அமைப்பு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்து. நேர்முகத் தேர்வுக்காக முதல் பட்டியலில் 15 பேரும், 2-ம் பட்டியலில் 6 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் முதல் கட்டமாக இன்று காலை 8 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆம்பூர், நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகங்களில் எழுத்தர், தலைமை எழுத்தர், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்த அழைக்கப்பட்டிருந்தனர். வேலை பெற்றுத் தருவதற்காக ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணிக்கு ஏற்ப பணம் வசூல் செய்யப்பட்டிருந்தது. மேலும், நேர்முகத் தேர்வு நடத்துவதற்காக வேலூர், சென்னை ஆகிய இடங்களில் இருந்து வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்த வருவதாகவும் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலர்கள் வந்து போகும் செலவுக்காக நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடம் தலா ரூ.1,250 வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வேலை கிடைத்த உடன் மேலும் குறிப்பிட்ட சில லட்சங்கள் ரொக்கமாகத் தர வேண்டுமென அவர்களிடம் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தொண்டு அமைப்பின் நிர்வாகிகளான வேலூர் மாவட்டம் அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், திருப்பத்தூர் தாலுகா, குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் மொத்தம் ரூ.14 லட்சம் வரை ரொக்கப் பணம் வசூலித்தது தெரியவந்தது.

நேர்முகத் தேர்வுக்காக அரசு முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 21 பேர் பட்டியலில் 7 பெண்களும் உள்ளனர். அதில் முதல்கட்டமாக நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்த 8 பேரிடம் வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். வேலை தேடுபவர்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களை முதலில் மக்கள் உரிமைகள் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது, பிறகு அவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது. அதை நம்பி அரசு வேலை பெற வேண்டுமென்ற ஆசையில், பலர் அவர்களிடம் பல லட்சம் ரொக்கப் பணத்தை இழந்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார். அதைத் தொடர்ந்து நகரக் காவல் நிலைய ஆய்வாளர் திருமால், தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் லிவிங்ஸ்டன், சுதாகர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆம்பூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

போலி நேர்முகத் தேர்வு நடத்திய தொண்டு நிறுவன அமைப்பினரிடம் டிஎஸ்பி சச்சிதானந்தம் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT