குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில் மலைப்பகுதியில் மது அருந்திய இளைஞர்கள் மீது போலீஸின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
மதுரை குன்னத்தூ ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன், அவருடன் இருந்த ஊராட்சி ஊழியர் முனியசாமி ஆகியோர் குன்னத்தூர் மலையில் கடந்த 11-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடுகின்றனர். முன்விரோதம், ஊராட்சி செயலர் நியமனம், கிருஷ்ணன் ஊராட்சித் தலைவரான பிறகு அவரது நடவடிக்கையால் அவருக்கு எதிரானவர்கள் போன்ற பல்வேறு நபர்களிடமும் வெவ்வேறு கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
இந்த விசாரணையில், ஊராட்சி செயலர் நியமனம் தொடர்பாக தலைவருக்கும், அதே ஊராட்சியில் பொறுப்பு செயலர் பதவி வகித்த பால்பாண்டி என்பவருக்கும் இடையேயான பிரச்சினையே முக்கியமாக பார்க்கப்படுகிறது.
போலீஸ் பிடியிலுள்ள இருவரிடமும் இது தொடர்பாக துருவித்துருவி விசாரிக்கின்றனர். இருப்பினும் 4 நாட் கள் ஆகியும் கொலையாளிகளைத் தீர்மானிப்பதில் சிக்கல் நீடிக் கிறது.
இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ‘‘கிருஷ்ணன் தலைவரான பிறகு, ஊராட்சியை முன்மாதிரியாகக் கொண்டுவர பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். குன்னத்தூரில் பல்வேறு தெருக்களில் அவர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தவறு செய்வோரை கண்காணிக்கும் நோக்கிலும் செயல்பட்டுள்ளார்.
இது அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
மேலும், அவர் அடிக்கடி மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும் இடமான குன்னத்தூர் மலைப் பகுதியில் மது அருந்துவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதையும் அவர் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்.
சம்பவத்தன்று மலையிலுள்ள சிவன் கோயில் அருகில் மது அருந்தியதாக கூறப்படும் இளைஞர்களை அவர்கள் தட்டிக்கேட்டபோது, மது அருந்திய இளைஞர்களால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்.
புதிய செயலர் நியமனம் பிரச்சினை, முன்னாள் தலைவர் திருப்பதி, செயலர் பால்பாண்டிக்கு எதிரான புகார் உட்பட 3 கோணத்தில் விசாரணை செல்கிறது. முன்னேற்றம் இருக்கிறது. விரைவில் கைது செய்வோம்,’’ என்றனர்.