தமிழகம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை மறுப்பது சரியல்ல: உயர் நீதிமன்றம் கருத்து

கி.மகாராஜன்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை மறுப்பது சரியல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி ராணுவ வீரர்களின் வாரிசுகளான சுகிஷா, பிரியங்கா, குரளரசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், நாட்டின் எல்லையை காக்கும் பாதுகாப்புடை வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவேண்டாமா? இந்தியாவிற்குள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தான் காரணம்.

பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடுமே தேவை இல்லை .

எனவே பணியிலுள்ள ராணுவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவ. 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT