தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் இனிப்பு பலகாரங்கள்தான். தற்போது இந்த பண்டிகை நெருங்கி வரும்நிலையில் இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் தயாரிப்பு, அதன் கொள்முதலில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுத்தமான தரமான எண்ணெய், மூலப்பொருட்கள் கொண்டு இனிப்புப் பலகாரங்களை தயாரிக்க வேண்டும் என்று வியாபாரிகளை உணவுப்பாதுகாப்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியை உணவுபாதுகாப்பு துறையினர் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக இன்று பால்கோவா கடைகளில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் எஸ்.சோமசுந்தரம் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பிற்கு தற்போதே அதற்கான மூலப்பொருட்களை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர்.
பலகாரங்களை தயாரித்து விற்கும்போது தரம் இல்லை என்று பிடித்தால் அவர்கள் மூலப்பொருட்கள் மீது பழியைப்போட்டு தப்பித்துக் கொள்வார்கள். அதனால், முன்கூட்டியே இந்த முறை ஆய்வை தொடங்கியுள்ளோம், ’’ என்றார்.