மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு அண்மையில் அதிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸில் தன்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்பதோடு காங்கிரஸ் கட்சியினர் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்போல இருக்கிறார்கள் என்று குஷ்பு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து தங்களை அவமானப்படுத்துவது போல இருக்கிறது என்று கருதிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் அவர் மீது புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
அதன்படி சீர்காழியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமையில் சீர்காழி வட்டத் தலைவர் ஆர்.நாகராஜன், வட்டச் செயலாளர் ஆர். நீலமேகம், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் ஜி.சண்முகம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்டோர் சீர்காழி காவல் நிலையத்திற்குச் சென்று உதவி ஆய்வாளர் நடராஜனிடம் புகார் மனு அளித்தனர்.