கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை திடீரென குறைந்துள்ளது. இது ரயில்வே வாரியத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆராய ரயில்வே வாரியம் மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே மேலாளர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 3,427.84 மில்லியன் ஆகும். இதுவே கடந்த ஆண்டில் இதேகாலத்தில் இந்த எண்ணிக்கை 3,575.30 மில்லியன் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 147.46 மில்லியன் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது 4.12 சதவீதமாகும். கட்டணம் எதுவும் உயர்த்தாத நிலையில், ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது ரயில்வே வாரியத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய வேண்டுமென ரயில்வே பொதுமேலாளர்களுக்கு ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரயில் பயணிகளுக்கான மானியத்தை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். வரும் நாட்களில் ரயில்சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்’’ என்றனர்.